சென்னையில் நடந்த நீதிக்கான பேரணி, ஈழத்தின்/மனிதநேயத்தின்பால் அக்கறை கொண்ட பலரையும் ஒன்றிணைத்து, நீதிக்கான குரல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை ; அது இன்னும் உரக்க உரக்க ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்னும் செய்தியினை சமூகத்துக்கு மிகச்சிறப்பாக எடுத்துச்சொல்லியிருக்கின்றது.
பேரணியாக மட்டுமில்லாமல், கடந்து சென்ற வாகனப்பயணிகள் அனைவரிடமும் முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோளின் நகல் விநியோகிக்கப்பட்டது.
ஈழத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்த அவலங்களை அய்யநாதன் விளக்கிப்பேசினார்.
நாம் இனி செய்ய வேண்டிய பணிகளை அருட்தந்தை ஜெகத் கெஸ்பார் பட்டியலிட்டார். அவருடைய உரையின் சுருக்கமான வடிவம் :
உலகின் பெரும்பாலான இன விடுதலைகள் சமூகத்தின் மிகச்சிறிய கூட்டமொன்றின் போராட்டத்திலிருந்தே துவங்கியிருக்கின்றன. அதனால் இந்த இளைஞர் கூட்டமும் அத்தகைய விதைநெல்லாக மாறவேண்டுமென வாழ்த்தினார்.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே அவரவர் அரசியல் நலன்களுக்குட்பட்டே ஈழப்பிரச்சினையினைக் கையாண்டதைக் கடுமையாக சாடியபோதும், தேர்தலுக்குப் பின்னர் அது அரசியல் அழுக்கில்லாத இளைஞர்களின் கையில் வந்துள்ளதை வரவேற்றார்.
ஈழ விடுதலைக்கான நான்கு கட்டப்போர்களும் யுத்தக்களத்தில் நடந்தது ; ஐந்தாம் கட்டப்போர் அரசியல் களத்தில் நடைபெறவேண்டும். யுத்தம் என்பது அரசியலின் மற்றொரு வடிவம் ; அரசியல் என்பது யுத்தத்தின் மற்றொரு வடிவம்!
இதுவரை இலங்கை நடத்திய இனப்படுகொலையினை முழுமையாய் வெளிக்கொணரவும், வதைமுகாம்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்டுத்தரவும், சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள போராளிகளின் கால்களை ஊனமாக்கும் சிங்கள இனவெறியினைத் தடுத்து அனைத்துலக போர் விதிகளின்படி அவர்களின் உயிருக்கு உறுதியளிக்கவும் நோக்கியதாய் நமது போராட்டங்களை தொடர வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.
உண்மை இலட்சியத்துக்கான போர் தோற்றாலும், அந்த இலட்சியத்தின் உண்மைத்தன்மை தோற்காதவரை, அப்போர் தோற்றுவிட்டதாய் எண்ணிவிடவேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்து நிறைவு செய்தார் அருட்தந்தை.
தங்களது ஞாயிறு மாலையினை உல்லாசம், திரைப்படம், ஓய்வுகளுக்கு தின்னக்கொடுத்துவிடாமல் ஒரு உன்னத நோக்கத்துக்கான போராட்டத்தில் செலவழித்த ஆயிரக்கணக்கான தகவல்நுட்பத்துறை இளைஞர்களின் உணர்வு அதனை உறுதி செய்தது.