Tuesday, November 17, 2020

 நண்பர் கூறிய கிராம பின்னணி ..கவிதை....அவர் கூறிய சூழலுக்கு

============================
மழை தண்ணி ஏதும் இல்லை ..
விவசாயம் விளைச்சலும் இல்லை ..
ஊரு சனம் காத்திருக்கு ...
காஞ்ச பூமி எப்போ ..மாறும்ம்னு.!!!
கருப்பு கோவில் பூசாரி அருள் வாக்கு கேட்கலாம்னு
ஊர் பெருசு சொல்ல..
ஊரு சனம் மொத்தமும் கூடிருச்சு ...
கோடங்கி வீட்டுல...
தலைக்கட்டு எல்லாம் கை கட்டி நிக்க
கோடங்கி குறி சொல்ல...உடுக்கை சத்தம் கூட சேர...
" பதினெட்டாம் படி கருப்பா...படியிறங்கி வந்துருடா..."
" சாதி சனம் காத்திருக்கு சண்டி கருப்பா வந்திருடா..."
"ஊரு சனம் காத்திருக்கு உருமா நீ வந்திருடா.."
"காஞ்ச பூமி செழிக்க நல் வாக்கு சொல்லிடுடா.."
"பஞ்சம் பசி போக்க , மூப்பு பிணி இல்லா நல் வாழ்க்கை தந்திடடா..."
பாட்டு சத்தமும் ...உடுக்கை சத்தமும்...ஒரு சேர கேக்குது..
ஊரு சனம் அத்தனையும் குலவை போட்டு ...கேக்குது...
நல் வாக்கு சொல்லு சாமி...
கூடியிருந்த கூட்டம் பார்த்து,..கோடங்கி சொன்ன குறி...
"குறைவில்லா கூட்டத்துக்கு குறையொன்னு வந்திருக்கு ..
கவலை ஒன்னும் வேண்டாம் ...கருப்பன் நானும் காத்திருப்பேன்...
காஞ்சு போன பூமியெல்லாம்...இனி காணியா மாறிப்போகும் ..
என்ன கருப்பா வேணும் உனக்கு ?
நா அமர புரவி இல்ல ...
காலொடஞ்சு காலம் ஆச்சு ..
போற வர மக்களெல்லாம்...ஏறெடுத்து பாக்கலையே ...
எல்லைச்சாமின்னு எடுத்து பாக்க ஆளில்லையே ..
ஒய்யாரமா நா உக்காந்தா புரவி ...உயிரில்லாம ஆடுது இங்கே .
ஊரு சனம் கூடி ஒத்துமையா புரவி எடுங்க.....!!
கோடங்கி மலையேற ...ஊர் பெருசு...திருநீர் அடிக்க....
குறிகேட்ட மொத்த சனம் ..திருவிழாக்கு ..தேதி கேக்க...
ஊர் பெருசு...இன்ன தொடக்கி ...ஏழாம் நாள் ...
புரவி எடுக்க ஏத்த நாளுன்னு ...குறிக்க...
சொந்த பந்தம் சொல்லணும்...
ஊரு போன மனுஷன் திரும்பணும் ...
இனிப்பு காரம் செய்யணும்...
வீடு வாசல் கழுவனும் ...
நாளும் கிழமையும் நெருங்கிடுச்சு...
காசு பணம் கையில் இல்ல...
என்ன செய்ய ஏது செய்ய...
எங்க குறை தீர்க்க குறி கேட்டோம் ..உன்கிட்ட ...
உங் குறைய...தீர்க்க சொல்லி...
எங்களை இன்னும் சும்மக்க வச்சுட்ட ...
சுமையோட சுமையா...இதையும் சுமக்குறோம்..
மழை தண்ணி பொழிஞ்சா சரி...!!!
பொழப்பு தழப்பு நடந்தா சரி...!!!!
புரவி எடுக்க புறப்படுவோம்....!!!
தி. சரவணன்

1 comment: